History of Red Cross


ரெட் கிராஸ் வரலாறு

ரெட் கிராஸ் இயக்கம் என்பது உலகெங்கிலும் துன்பமுறு மக்களின் துயர் துடைக்க மனிதாபிமானம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தன்னலமற்ற சேவை மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் உலக அளவிலான ஒரு மாபெரும் இயக்கமாகும். இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் என்பவர் ஆவார். இவர் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரத்தில் ஒரு வணிகக்குடும்பத்தில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள் பிறந்தார். இளமையிலிருந்தே சமுதாயத்தொண்டார்வம் கொண்ட இவர் 1859 ஆம் வருடம் ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள லம்பார்டி சமவெளிக்கு தன் வியாபார சம்பந்தமாகச் சென்றார். அந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி மூன்றாம் நெப்போலியன் சர்தானியா அரசரின் உதவியோடு ஆஸ்டிரியா நாட்டுடன் போர் புரிவதில் ஈடுபட்டிருந்தார். டுனாண்ட் நெப்போலியனை சந்தித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்ஜீரியாவில் காற்றலை (வின்ட் மில்) விற்பதற்கு அனுமதி பெற எண்ணியிருந்தார். ஆனால் அது நடைபெறாமலேயே போய்விட்டது.

அதுசமயம் ஒரு நாள் இரவு, வடக்கு இத்தாலியில் உள்ள கார்ல்டி கிளியோன் கிலாபி என்ற இடத்தில் உள்ள ஒரு சத்திரத்தில் டுனாண்ட் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். திடீரென்று ஏற்பட்ட வெடிகுண்டு சத்தத்தால் அவர் விழித்துக் கொண்டார். அந்த சத்தம் பக்கத்தில் உள்ள சால்பரினோ என்ற இடத்தில் இருந்து வந்தது. சால்பரினோ போர் தொடங்கிவிட்டது. பிரான்ஸ் சக்கரவர்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்பதை டுனாண்ட் உணர்ந்தார். அவர் படுக்கையைவிட்டு எழுந்தார். உடைகளை அணிந்து கொண்டு அவசர அவசரமாக அந்த நகரத்தை விட்டு சால்பரினோ நோக்கிச் சென்றார். ஒரு குன்றின் உயரத்தை அடைந்தபோது போர்க்களக் காட்சி அவருக்கு தென்பட்டது. அவருக்கு கீழே உள்ள சமவெளியில் 10 மைல் தூரத்திற்கு 3 லட்சம் மனிதர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். ஒருபுறம் பிரான்ஸ் நாட்டு வீரர்களும், மறுபுறம் ஆஸ்டிரியா நாட்டு வீரர்களும் இருந்தனர். அந்த காட்சியைக் கண்டு டுனாண்ட் பல மணிநேரம் அங்கேயே இருந்தார். போர் காலை 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடந்தது. ஆஸ்டிரியர்கள் பின்வாங்கினர். இருட்டத் தொடங்கியதும் பல அதிகாரிகளும் சிப்பாய்களும் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடிச் சென்றனர். மறுநாள் காலை அங்கே ஒரு கோர காட்சி தென்பட்டது. அந்த காட்சியே ரெட்கிராஸ் ஆரம்பிக்க காரணமாயிருந்தது.


மருத்துவத்துறையைச் சேந்ந்தவர்கள் ஒரு சிலரே அங்கிருந்தனர். குழப்பம் மிகுந்திருந்தது. காயமடைந்தோர் வலியினால் கதறிக் கொண்டிருந்தனர். இராணுவ மருத்துவ உதவி கிட்டத்தட்ட கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விளைவாக அங்கே துன்பம் மிகுந்திருந்தது. போதிய மருத்துவ வசதியின்றி இதன் விளைவாக அங்கே துன்பம் மிகுந்தது. போதிய மருத்துவ வசதியின்றி காயம்பட்டோரில் பலர் இறக்க நேர்ந்தது. ஒரே ஒரு நாள் நடந்த போரில் சுமார் நாற்பதாயிரம் பேர் இறந்தோ, அடிபட்டோ அல்லது காணாமலோ போய்விட்டார்கள். முதலில் என்ன செய்யவதென்று தெரியாமல் டுனான்ட் திகைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உடனே அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டார். தானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். அருகில் உள்ள இடங்களுக்குச் சென்று பொது மருத்துவர்களையும், தொண்டர்களையும், திரட்டிக் கொண்டு கார்டிக்கலியோவில் உள்ள சர்ச்சிற்கு அழைத்து வந்து அவர்களைப் பணியில் ஈடுபடுத்தினார். அருகிலுள்ள ஊற்றுக்களிலிருந்தும் பண்ணைகளிலிருந்தும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு போர் வீரர்களின் தாகம் தீர்க்கப்பட்டது. மணிக்கணக்காக டுனாண்ட் ஓடி, ஆடி வேலை செய்தார். அவருடைய வெள்ளாடை இரத்தக்கறையானது. வலியால் துடிப்பவரின் அலறல் அவருடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. போர் வீரர்கள் அவரை ”வெள்ளை மாமனிதர்" என்று அழைத்தனர். (தி ஜென்டில்மேன் இன் ஒயிட்)

தொண்டர்களில் பெரும்பாலோர் போதிய பயிற்சி இல்லாதவர்கள். தொண்டர்கள் பிரான்ஸ் நாட்டு மற்றும் சர்தானியா வீரர்களுக்கு மட்டும்தான் உதவி செய்தனர். ஏனென்றால், அவர்களைத் தங்களுடைய நண்பர்களாக நினைத்தனர். காயம்பட்ட ஆஸ்ட்ரியா வீரர்களைத் துன்பப்பட விட்டு விட்டனர். டுனான்டோ எல்லோரும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்துடன் எல்லோருக்கும் சேவை செய்தார். அப்போது ஒரு பெண்மணி மிகவும் பரபரப்புடன் ”ஐயோ அவன் ஒரு விரோதி" என்று அலறினாள். அதற்கு டுனாண்ட் "விரோதியும் மனிதன்தான்" என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் நெகிழச் செய்தது.

சால்பரினோவில் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக நீண்டநாள் முயற்சிக்குப் பிறகு "சால்பரினோவின் நினைவுகள்" என்ற ஒரு புத்தகத்தை 1862 ஆம் ஆண்டு டுனான்ட் எழுதி முடித்தார். தன் புத்தகத்தின் முடிவில் அவர் 2 முக்கிய திட்டங்களைக் கொடுத்திருந்தார். முதலாவது, போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நிவாரணச் சங்கம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, போரில் காயமுற்ற மற்றும் உடல் நலம் குன்றிய வீரர்களையும் மேற்கண்ட சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

முதல் திட்டத்தின் விளைவாக ரெட்கிராஸ் இயக்கம் உருவாகியது.


இரண்டாவது திட்டத்தின் விளைவாக முதலாவது ஜெனீவா ஒப்பந்தம் உருவாயிற்று.


இவருடைய சொந்தச் செலவில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தின் நகல்களை ஐரேப்பாவில் உள்ள அரசாங்க தலைவர்களுக்கும் இராணுவ தளபதிகளுக்கும் பல சமூகத் தலைவர்களுக்கும் அனுப்பினார். ஒவ்வொரு நாட்டில் உள்ள அரசர்களும், அரசிகளும், மருத்துவர்களும், தளபதிகளும், எழுத்தாளர்களும், புகழ்பெற்ற மனிதர்களும் காயமுற்றோருக்கு உதவ கொடுத்துள்ள இத்திட்டம் புத்திசாலித்தனமானது. 


அது நடைமுறைக்கு ஏற்றது என நினைத்தனர். இவரது கருத்துக்கு பெரும் ஆதரவு கிட்டியது. 1863ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இப்புத்தகம் வெளிவந்த 3 மாதங்களுக்குப் பிறகு ஜெனீவாவில் உள்ள பொதுநல சங்கக் கூட்டத்தில் இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு கருத்து விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இச்சங்கத்தில் ஒரு குழு அமைத்து டுனாண்ட்டின் எண்ணங்களைச் செயல் வடிவமாக்கும் சாத்தியக் கூறுகளைச் கண்டறிய திட்டமிட்டனர். அவர்கள் டுனாண்ட்டையும் அழைத்தனர். ஒரு 5 நபர் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் குஸ்தாவ் மொய்னியர், ஜெனரல் கலிலியோடுபோ, டாக்டர் லூயி அப்பையா, டாக்டர் தியோடர் மௌடயனியர் மற்றும் ஹென்றி டுனாண்ட் ஆகியோர் இடம் பெற்றனர். மற்ற அங்கத்தினர்களுக்கு டுனாண்ட் தன் திட்டத்தைப் பற்றி விளக்கினார். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் மருத்துவ சங்கத்தொண்டர்கள் குழுவை உருவாக்க முயற்சிக்க வேண்டும், ஒவ்வொரு சங்கமும் போரின்போது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உதவி தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். 


இந்த சங்கங்கள் அமைக்கப்பட வேண்டிய முறைகளைப் பற்றி பலவித கருத்துக்களை அங்கத்தினர்கள் கூறினார்கள். டுனாண்ட்டின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க 1863 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜெனீவாவுக்கு வரும்படி மற்ற நாட்டுத் தலைவர்களை இக்குழு கேட்டுக் கொண்டது. அதன்படி 16 நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் இக்குழுவைச் சந்தித்து 4 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு ரெட்கிராஸ் சங்கம் தோன்றியது. 1864 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே போர் மூண்டது. காயமுற்றவர்களுக்கு உதவி செய்ய சங்கம், டாக்டர். அப்பைய்யாவை அனுப்பியது. முதன்முறையாக ரெட்கிராஸ் சின்னம் பொருந்திய வெள்ளை கைப்பட்டை சேவை செய்வோர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன்பிறகு பன்னாட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நாட்டுத் தலைவர்களை இக்குழு கேட்டுக் கொண்டது.


சுவிட்சர்லாந்து நாட்டுத் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பன்னாட்டுத் தலைவர்கள் சுவிட்சர்லாந்தில் 1864ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூடினர். அக்கூட்டத்தில் ஹென்றி டுனாண்ட்டின் திட்டங்கள் ஆராயப்பட்டு பத்து அம்ச திட்டம் உருவாயிற்று. அவை ஜெனீவா ஒப்பந்தம் எனக் கையெழுத்தாயிற்று. 1864 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஜெனீவாவில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச ரெட்கிராஸ் குழு மற்ற எல்லா நாடுகளிலும் தேசிய ரெட்கிராஸ் மற்றும் ரெட்கிரஸன்ட் சங்கங்கள் தோன்றப் பாடுபட்டது. 1881 ஆம் ஆண்டில் கிளாராபர்டன் (Clara Berton) என்ற அம்மையாரின் முயற்சியால் அமெரிக்காவில் ரெட்கிராஸ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின் போது காயம்பட்ட போர்வீரர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரெட்கிராஸ் சங்கங்கள் செய்த சேவைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ரெட்கிராஸ் அடையாளச் சின்னத்தை அணிந்த மருத்துவர்களும் தாதியர்களும் அப்போரின்போது செய்த சேவைகள் மக்களிடையே பிரபலமாயின. சர்வதேச ரெட்கிராஸ் சங்கம், போர்கைதிகளுக்கு சேவையை தாராளமாகச் செய்தது. 1919 ஆம் ஆண்டு ரெட்கிராஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (League of Red Cross) தோன்றியது. இக்கூட்டமைப்பு பல நாட்டு ரெட்கிராஸ் சங்கங்களின் அமைதிக்கால சேவையை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதும் ரெட்கிராஸின் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரெட்கிராஸ் சங்கம் ஒரு அங்கமாகிவிட்டது.


ரெட் கிராஸ் சின்னம்

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக்கொடி, சிவப்பு நிற பின்னணியில் வெள்ளை சிலுவைக் குறியைக் கொண்டது. ரெட்கிராஸ் சங்கம் சுவிட்சர்லாந்தில் தோன்றியதால் அதன் நினைவாகவும், அதே நேரத்தில் மாறுபட்ட சின்னமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கிணங்க, வெள்ளைப் பின்னணியில் சிவப்பு நிற சிலுவை குறி ரெட்கிராஸ் சங்கத்திற்கு சின்னமாக எற்றுக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம் நாடுகள் இச்சின்னத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, பிறகு வெள்ளை பின்னணியில் சிவப்பு நிற பிறை சந்திரன் சின்னமாக ஏற்றுக் கொண்டனர்.

இவ்விரு சின்னங்களையும் உலக ரெட்கிராஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

1920 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியாவில் ரெட்கிராஸ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் இச்சங்கம் துவக்கப்பட்டது.


வாழ்க்கைக்குறிப்பு - ஹென்றி டுனாண்ட் அவர்கள் 

08.05.1828 ஜீன் ஹென்றி டுனான்ட் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிறந்தார்.

1849 வங்கி விஷயங்களைப் பயிலுவதற்காக ஓர் வங்கியில் பயிற்சி ஊழியராகச் சேர்க்கப்பட்டார்.

1853 அல்ஜீரியாவிலுள்ள தான் பணிபுரியும் வங்கியில் துணை நிறுவனம் ஒன்றிற்குப் பொது மேலாளராகத் தற்காலிகப் பணிநியமனம் செய்யப்பட்டார்.

24.06.1859 சால்பரினோ யுத்தம் நடந்தது.

1862 "சால்பரினோவின் நினைவு" என்ற நூல் வெளியிடப்பட்டது.

1863 ஜெனீவா பொதுநலச் சங்கம் கூடியது. அவர்கள் ஹென்றி டுனாண்ட்டுக்கு அழைப்பு விடுத்தனர். ஐந்து பேர் கொண்ட ஓர் குழு உருவாகியது.

நிவாரண சங்கங்களைத் தொடங்குவதற்கு அவர்களைச் சம்மதிக்க வைக்கும் பொருட்டு டுனாண்ட், ஐரோப்பாவிலுள்ள பல தலைவர்களைச் சந்தித்தனர்.

அந்த ஐந்து பேர் கொண்ட அவையானது ஜெனீவாவில் ஒரு பேரவையைக் கூட்டியது. 

அதற்கு 16 நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. நிவாரணச் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று இந்தப் பேரவைப் பரிந்துரை செய்ததுடன், அவைகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தரும்படி அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேரவைப் பரிந்துரை செய்ததுடன், அவைகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தரும்படி அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேரவை 10 தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது. சாசனமாக செஞ்சிலுவை இயக்கத்தின் நிறுவனச் அமைந்ததுடன் டுனாண்ட் முன்மொழிந்த காயம்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிக்குழுக்களின் அலுவல்களையும் பணிபுரியும் வகையினையும் அச்சாசனம் வரையறுக்கிறது. இவ்வாறு செஞ்சிலுவைச் சங்கம் பிறந்தது.

22.08.1864 முதல் ஜெனீவா ஒப்பந்தம் 12 நாடுகளினால் கையொப்பமிடப்பட்டது.

1867 டுனான்ட்டின் நீண்ட கால கவனிப்பின்மை காரணமாக அவரது வர்த்தக நிறுவனம் முடப்பட வேண்டியதாயிற்று. அவர் ஜெனீவாவை விட்டு அகன்றார். மீண்டும் அங்குத் திரும்பி வரவேயில்லை.

1867-1887 தமது நண்பர்கள் தந்த மிகச் சொற்ப உதவிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் குறைந்த ஊதியத்தைக் கொண்டு மிகவும் கடின வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

அவர் ரெட்கிராஸ் சங்கத்தைத் தோற்றுவித்தமைக்காக மரியாதை செய்யப்பட பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மக்கள் முன் எப்போதாவது சிறிது நேரம் தோன்றுவார். அதிக நேரங்கள் அவர் மறைவாகவே வாழ்ந்தார்.

1887ஜூலை திடீரென அவர் சுவிட்சர்லாந்திலுள்ள ”ஹெய்டன்" நகரில் தோன்றினார்.

1892 உள்ளுர் மருத்துவமனையில் வாழ்க்கையை மேற்கொண்டார்.
 
1895 ஒரு நாள் ஓர் இளம் பத்திரிகையாளர், டுனான்ட்டைப் பற்றிக் கேள்வியுற்று அவரைப் பேட்டி கண்டார். ஒரு சில நாட்களுக்குள், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உலகம் அறிந்தது. அவருக்கு உதவி செய்வதற்காக கோரிக்கைகள் குவிந்தன. ஆனால், அவர் தமக்கு எந்தவிதமான உதவிகளும் தேவைப்படாது என்று தெளிவாக்கினார். மருத்துவமனை மற்றும் அவரது அருகிலிருப்போர்களின் உதவிகளே அவருக்குப் போதுமானவையாக இருந்தன.

1901 முதல் சமாதானத்துக்கான பரிசினை நோபல் குழு இவருக்கும், பிரட்ரிக் பாலி என்ற பிரெஞ்சுக்காரருக்கும் கூட்டாக பகிர்ந்து கொள்ளுமாறு கொடுத்தது. அதற்கானப் பதக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

30.10.1910 சுவிட்சர்லாந்திலுள்ள "ஹெய்டன்" நகரில் இயற்கை எய்தினார்.

To Top